அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றிருந்த பகுதியில் சிசிடிவி கேமராவை துரதிருஷ்டவசமாக நிறுத்தி வைத்திருந்தோம் என்று அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு அது பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார்
இதுதொடர்பாக பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியதை அடுத்து தமிழக அரசு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தது. அந்த கமிஷனும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மறுத்துவர்கள், நெருக்கமானவர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தியது.
ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் 55 பக்கங்களை கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் டிசம்பர் 5-ஆம் தேதி வரை நடந்தது என்ன என்பது குறித்து விவரங்களை குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சசிகலா தனது பிரமாண பத்திரத்தில் கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று சில கருத்துகளை வெளியிட்டது. அவற்றுள் 70 சதவீதம் உண்மை இல்லை என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்தது. மேலும் அவை சசிகலாவுக்கு சாதகமானவற்றையே செய்தியாக தந்துள்ளதாகவும் ஆணையம் தெரிவித்தது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தது குறித்து சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். அப்பல்லோ மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள் என அனைவரும் அதிக கவனம் கொண்டு சிகிச்சை அளித்தோம்.
ஜெயலலிதாவை யாரெல்லாம் சந்திக்க வேண்டும் என்பதை அவருடன் இருந்தவர்கள் கூறிய நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த பகுதியில் துரதிருஷ்டவசமாக சிசிடிவி கேமராக்களை நிறுத்தி வைத்தோம். அவர் சிகிச்சை பெறும் காட்சிகளை சம்பந்தமில்லாதவர்கள் பார்க்ககூடாது என்பதற்காக கேமராவை அணைத்து வைத்தோம். அவரது தனிமை மற்றும் பாதுகாப்பு கருதி மற்ற நோயாளிகள் இடம்மாற்றப்பட்டனர். எனவே ஜெ சிகிச்சை பெற்றதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் இல்லை என்றார்.
English summary
Apollo group of hospitals Chairman Pratap Reddy says that the CCTV Camera switched off in the ward where Jayalalitha gets treatment.
Tags : jayalalitha, apollo, ஜெயலலிதா, அப்பல்லோ
No comments:
Post a Comment